Wednesday, October 10, 2007

சுத்த சைவம்


சண்டைகள் இல்லை;
சமரசம் வேண்டாம்;
முறித்து கொள்கிறது உறவுகளை..
சட்டம் தூவும்
விவாகரத்து அக்ஷதைகள்..

சிறப்பு வரிசை கட்டணம்
உண்டியலும் வாய் பிளந்தது
கொட்டாவி விடும்
வாசல் தெய்வங்கள்..

நடுத்தெருவில்
துடித்து கொண்டிருக்கும் உயிர்
வேடிக்கை பார்த்துவிட்டு
நடுப்பக்கத்தைத் திருப்பும்
ஆசாமி..

கரைத்தாண்டி
கலாச்சாரத்தின் வண்ணம் மாற்றும்
கடற்கரை நிலாக்கள்..

பத்து மாத வலியை
பத்தே நிமிடத்தில்
மறக்க வைக்கும்
பெரிய பத்தின் காந்தி சிரிப்பு..

முடித்து வைக்க
மரணமே வந்தாலும்
அதற்கும் சிலையெழுப்பி
மாலையிடுவான் -
எங்க ஊர் அரசியல்வாதி..

கோவணமும்
கட்சி கொடியாகும்
அபாயம்..!


வயதுக்கு வந்த நாட்களில்..


யாரோ என்னுடன்
நடப்பதைப் போலவே
உணர்கிறேன்..

யாருக்குமறியாமல்
கண்ணாடிமுன் நின்று
சிரித்துக் கொள்கிறேன்..

எல்லோரும் என்னையே
உற்றுப் பார்ப்பதுபோலவே
தெரிகிறது..

கண்கள் நேராக
பார்த்து பேசக்
கூச்சப்படுகிறது..!

எனக்கறியாமல் உடைகளைச்
சரிசெய்துகொள்கிறது
கைகள்..!

தெருவில் இருக்கும்
கடைகளில் தொங்கும்
உடைகளை கனவில்
உடுத்தி ரசிக்கிறேன்..

நாளும் -
நாலும் தெரிந்ததுபோல்
கதைக்கிறது மனசு..

Wednesday, October 3, 2007

காதலும் நானும்


உண்மையாகவே கண்ணாடியில்
இன்றைக்கு மட்டும்
அழகாகவே தெரிகிறேன்..

இரவும் பகலும் -
நிலவும் சூரியனும் -
விழித்தேயிருக்கிறது..

நாட்கள் எனக்கே
சொந்தமாக இருக்கிறது..

பேருந்து பயணங்களில்
தனிமையாக
பயணிப்பதில்லை..

பூக்கள் படுக்கின்ற
சாலையில் நடப்பதேயில்லை..

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
வித்தியாசமே தெரிவதில்லை..

ஒவ்வொரு வேலையும்
இரண்டு முறை செய்யும்
பழக்கம் பழகிவிட்டது..


மிக சரியான பொய்களை
நிதமும் சொல்லிக் கொள்கிறேன்
கண்மூடிதனமாக..

எல்லா அழகுடனும் - உன்னையே
ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது
கண்கள்...

உணவு வேளையில்
பொறியலில் உள்ள
கடுகையும் பருப்பையும்
பிரித்துக் கொண்டிருக்கிறேன்..

காதலே!..
குழந்தை அழுதுக்கொண்டேயிருக்கிறது
நிலாவைக் காட்டி
சோரூட்டுவாயா..