Sunday, December 23, 2007

கண்ணாடிப் புன்னகை

பனிக்காற்றில்
தலை அசைத்து உறவாடும்
என் தோட்டத்து மலர்கள்...

வேப்ப மரத்து கூட்டில்
சிறகடித்து கூச்சலிடும்
சிட்டுக்குருவி..

தெருக்கதவோரம் செய்தித்தாள்,
மணிச்சத்தத்துடன் பால்காரன்..
கோலத்தை அழிக்காமல்...

பேருந்து படிக்கட்டில்
சிரித்தும்ம்.. சத்தமிட்டும்ம்..
ஊஞ்சலாடும் மாணவர்கள்...

புன்னகைத்தப்படியே இருந்தான்
என் மகன் - மாலையிட்ட
கண்ணாடிக் கூட்டில்...

காதல் படிக்கட்டு

முதல் சிரிப்பில் -
தாயவளின் அருகாமையை
உணர்ந்தேன்..

இரண்டாம் சந்திப்பில்
சிறகேதும் இல்லாமல்
பறந்தேன்..

மூன்றாம் பொழுதில்
நிலவோடு தனிமையில்
பேசி மகிழ்ந்தேன்..

நான்காம் விழிகள்
பார்ப்பது கூட தெரியாமல்
யாவும் மறந்தேன்..

ஐந்தே நிமிடம் கழித்து வருவதானாலும்
நொடிக்கொரு முறை வழிப்பார்த்தே
விழித்தேன்..

ஆறறிவை மறந்து
நடுரோட்டில் எதையோ பேசி
புலம்பி அலைந்தேன்..

ஏழுலகும் எட்டுத்திசையும்
காலடியில் இருப்பதாய்
கர்வமடைந்தேன்...

நீ காதலி ?
நான் காதலன் ?
கேள்விக்கு விடையளிக்காமலும்
விடைபெற முடியாமலும்
தூக்கம் தொலைத்தேன்..

பயணங்கள் முடியவிலலை
படிகளும் தூரமில்லை

காதலில் -
மறக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
மரணத்திற்கு சமானமே..

Wednesday, October 10, 2007

சுத்த சைவம்


சண்டைகள் இல்லை;
சமரசம் வேண்டாம்;
முறித்து கொள்கிறது உறவுகளை..
சட்டம் தூவும்
விவாகரத்து அக்ஷதைகள்..

சிறப்பு வரிசை கட்டணம்
உண்டியலும் வாய் பிளந்தது
கொட்டாவி விடும்
வாசல் தெய்வங்கள்..

நடுத்தெருவில்
துடித்து கொண்டிருக்கும் உயிர்
வேடிக்கை பார்த்துவிட்டு
நடுப்பக்கத்தைத் திருப்பும்
ஆசாமி..

கரைத்தாண்டி
கலாச்சாரத்தின் வண்ணம் மாற்றும்
கடற்கரை நிலாக்கள்..

பத்து மாத வலியை
பத்தே நிமிடத்தில்
மறக்க வைக்கும்
பெரிய பத்தின் காந்தி சிரிப்பு..

முடித்து வைக்க
மரணமே வந்தாலும்
அதற்கும் சிலையெழுப்பி
மாலையிடுவான் -
எங்க ஊர் அரசியல்வாதி..

கோவணமும்
கட்சி கொடியாகும்
அபாயம்..!


வயதுக்கு வந்த நாட்களில்..


யாரோ என்னுடன்
நடப்பதைப் போலவே
உணர்கிறேன்..

யாருக்குமறியாமல்
கண்ணாடிமுன் நின்று
சிரித்துக் கொள்கிறேன்..

எல்லோரும் என்னையே
உற்றுப் பார்ப்பதுபோலவே
தெரிகிறது..

கண்கள் நேராக
பார்த்து பேசக்
கூச்சப்படுகிறது..!

எனக்கறியாமல் உடைகளைச்
சரிசெய்துகொள்கிறது
கைகள்..!

தெருவில் இருக்கும்
கடைகளில் தொங்கும்
உடைகளை கனவில்
உடுத்தி ரசிக்கிறேன்..

நாளும் -
நாலும் தெரிந்ததுபோல்
கதைக்கிறது மனசு..

Wednesday, October 3, 2007

காதலும் நானும்


உண்மையாகவே கண்ணாடியில்
இன்றைக்கு மட்டும்
அழகாகவே தெரிகிறேன்..

இரவும் பகலும் -
நிலவும் சூரியனும் -
விழித்தேயிருக்கிறது..

நாட்கள் எனக்கே
சொந்தமாக இருக்கிறது..

பேருந்து பயணங்களில்
தனிமையாக
பயணிப்பதில்லை..

பூக்கள் படுக்கின்ற
சாலையில் நடப்பதேயில்லை..

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
வித்தியாசமே தெரிவதில்லை..

ஒவ்வொரு வேலையும்
இரண்டு முறை செய்யும்
பழக்கம் பழகிவிட்டது..


மிக சரியான பொய்களை
நிதமும் சொல்லிக் கொள்கிறேன்
கண்மூடிதனமாக..

எல்லா அழகுடனும் - உன்னையே
ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது
கண்கள்...

உணவு வேளையில்
பொறியலில் உள்ள
கடுகையும் பருப்பையும்
பிரித்துக் கொண்டிருக்கிறேன்..

காதலே!..
குழந்தை அழுதுக்கொண்டேயிருக்கிறது
நிலாவைக் காட்டி
சோரூட்டுவாயா..




Sunday, September 30, 2007

முதியோர் இல்லம்


நிழல் தரும்
மரங்களை நாமறிவோம்..
நிழல் தர வெயிலில் நிற்கும்
மரங்களை யாரறிவார்..

நட்பும் காதலும்


உடலும் உயிரும்..
குடையும் நிழலும்..
இவர்களின் தூரத்தில்
அழகும் உறவும் இருக்கிறது..

ஒன்று -
பயணம் செய்கையில்
கூடவே வருகிறது.. (உடல்)
இன்னொன்று -
பயணம் செல்கையில்
நமக்காகவே துடிக்கிறது.. (உயிர்)

இவன்- கையகத்திலே
எனை மாட்டிக்கொள்வான்.. (குடை)
இவள்-காலடியிலே
எனை சாய்த்துக்கொள்வாள்.. (நிழல்)

ஒன்று -சுவைத்தவுடன்
நாவிலே இனித்துவிடும்..
இன்னொன்று -நாவில் மட்டும் அல்லாது
இதயம் வரை இனிக்கும்..

பிரிவில் ஒன்று -
கை கொடுத்து தோள் தட்டும்..
இன்னொன்று -
மனம் விடுத்து கண்ணீர் முட்டும்..

இருவருக்கும்
இடைவெளியும் உண்டு
இடைவேளையும் உண்டு..

தேடிக்கொள்ளும் உறவுகள் இவை..
தேயாத நிலவுகள் இவை..

அனுமதி இலவசம்..
வருவோர் வரலாம்..
கேட்போர் கேட்களாம்..

Friday, September 21, 2007

அசரிரி..

விடியல் ஞாபகத்தில்
விழித்துக்கொண்டது
இமைகள்..

காசில்லா நேரங்களில்
தந்தையின் ஞாபகம்

பசிவரும் நேரங்களில்
தாயின் ஞாபகம்..

உண்ணும் தருவாயில்
'இன்னும் கொஞ்சம்..
இன்னும் கொஞ்சம்..'
அக்காவின் ஞாபகம்

கூடத்தில் நான் மட்டும் -
தங்கையின் ஞாபகம்

சாலையோரத்தில் நடந்து சென்றேன்
கால் வலித்தது
அண்ணாவின் ஞாபகம்

உணர்வுகளுக்கிடையே
உணவு மட்டும -
இடை விட்டு..

விதியை நினைத்தபடி
இமைமூடி அமர்ந்தேன்..

"என்னடா சாப்டியா.." கேட்டவாறே
உள்ளே நுழைந்தான்
நண்பன் -
அம்மாவின் அசரிரி..

ங்கா..


போன உசுரு திரும்பி வந்துடுச்சு..
உன் உசரம் காண மனசு தேம்பி அழுதுடுச்சு..
எல்லா செல்வமும் உன் மூலமா வந்துடுச்சு..
'ம்மா'னு சொல்லிக் கேட்க மனசு ஏங்கிடுச்சு..

கொடுத்த பாரத்த உன் மூலமா தெரிஞ்சுகிட்டேன்!
கொண்ட துணியோட மாரோட அணைச்சுகிட்டேன்!
ஒத்தடமா கண்ணீர பாதத்துல தெளிச்சுவச்சேன்!
ஒத்த ரூபா காச மஞ்ச துணியில முடிஞ்சுவச்சேன்!

முட்ட கண்ணும் மொட்டு இதழும் துவளுது.. பேசுது..
வட்ட நிலவும் உன் அழக பார்த்து மயங்குது.. ஏங்குது..
கஷ்டமில்லாம கை ரெண்டையும் முறிக்குது.. சிரிக்குது..
அது இஷ்டத்துக்கு இன்னிக்கே அழுது பழகுது..

விடிஞ்சதும் நிலவும் தூங்குது நீயும் தூங்குற..
கண்ணு கொஞ்சம் அசந்தா 'ங்கா..ங்கா'னு அழுதுபுடுற..
எரும்பு கடிச்சுதா பசிக்குதான்னு தெரியாம புலம்புறேன்!.
அரும்பு தேகத்த உசுரோட சேர்த்து அணைக்குறேன்..!..

முத்தம்


இரு உதடுகள் நடத்தும்
அடையாள வேலை நிறுத்தம்!..

உதடுகள் கூட்டி
ஆசைகள் பெறுக்கி
நேரம் கழித்து - இமைகள்
வகுத்து கூறும் வாய்ப்பாடு!..

இருக்க மூடி -
இருகக் கூடி -
தவமிருக்கும் பொழுதுகள்!..

வந்த இடம் உலராது..
சேரும் இடம் தெரியாது..
முகம் புதைக்க திசைத் தேடும்
வேர்கள் போல...

கொஞ்சம் கொஞ்சும் -
இரவுகள்..
கெஞ்சிய பின் மிஞ்சும் -
உதடுகள்..

மொத்தமும் நித்தமும்
சத்தமிடாமல் -
ம்ம்..

Tuesday, September 18, 2007

பாத்திரம் அறிந்த தெய்வங்கள்


வேதங்கள் ஓதும் சத்தம் கேட்கிறது..
ஆலயமணி ஓலிக்கிறது..
தொழுகையும் ஆரம்பித்தாகிவிட்டது..
இன்னும் காணவில்லையே பக்தர்களை.?..

ஒவ்வொரு தெய்வங்களும்
பக்தர்களைத் தேடி
ஆலயங்களின் வாசலில்..

பாத்திரம் அறிந்து தன்னிடத்தை
தேர்ந்தெடுத்த தெய்வங்கள்..

நிதி நிலைமை பற்றாக்குறை -
உண்டியலுக்கு பட்டையிட்டு
பொட்டிட்டு பூவைத்தார் பூசாரி!..

பல கேள்விகளுக்கு -
பதில் அளிக்க முடியாமல்
பாய் விரித்து மரித்து போகும்
சுடுகாடு தவிர்த்த மனித உயிர்கள்..

கனவில் கூட
வரிசையில் தான்
உணவு கிடைக்கிறது...

புது காரணங்கள் கிடைக்காமல்
வழக்கம் போல் -
அதே இடத்தில்..

முதன்முறையாய்...

கூந்தலில் படியாத
ஓரிரு தலைமுடி
பின்னிழுக்கிறாய் - கேட்காமல்
முன்னே விழுகிறது...

மடியில் பூத்திருக்கும்
தாவணிப்பூக்கள்
சரி செய்துக்கொள்கிறாய்
தவறில்லை - ஆனால்
தவறல்லவா செய்யத் தூண்டுகிறாய்...

தெரியுமா? தவறு செய்யத் தூண்டுபவருக்குத்தான்
தண்டனை அதிகம் -
(என்) ஆயுள் தண்டனை...

புத்தகத்தை அணைத்தபடி
தலைக்குனிந்தபடி -
ஓர் அழகு...

ஒற்றை ஜடை
சிற்றிடை
கொஞ்சம் ... இல்லை இல்லை
கொஞ்சும்...

பின் செல்கிறது நிழல்
நானும்...
முதன்முறையாய்!

அனாதை


இந்த மலர்க்கொடியை
அறியாமல் கூட
கிள்ளிவிடாதீர்கள் -
இதற்கு வேர்கள் இல்லை!...