Monday, March 28, 2011

தெரியாது

கனவுகளில் கைக்கோர்த்துக்கொண்டேன்
என்னில் நான் தொலைவது தெரியாது..


மௌனம் போர்த்திக்கொண்டேன்
உள்ளம் பேசுவது தெரியாது..


கண்களை மூடிக்கொண்டேன்
இறந்தும் வாழுமிடம் தெரியாது..


மனம்தனில் நினைத்துக்கொண்டேன்
இருப்பிடத்தில் உயிர்கள் தெரியாது..


தெரியாது.. தெரியாது..
உன் அருகாமையில் எதுவுமே தெரியாது..


நீ பேசாமல்... பார்க்காமல்.. இருக்கும் போது
உன் ஒவ்வொரு விரலும் செய்யும் அசைவுகள்..
மேலும் கீழுமாய் பொய் பேசும் விழிகள்..
மனதென்னும் மூங்கிலுக்குள் நுழைந்தது காற்று..


எல்லாமே பழசுதான் என்றாலும்
காதல்னு வரும்போது புதுசுதானே..
உன்னோட இதழ் விரியாத சிரிப்பு மாதிரி..


Tuesday, March 8, 2011

முதல் விசும்பலிலே..

காய்க‌றி ச‌ந்தையிலும்
பூக்க‌டை வீதியிலும்
முழுமை அடைகிற‌து
முப்ப‌த்திமூன்று விழுக்காடுக‌ள்...

விழுக்காடுக‌ள் அதிக‌ரித்தாலும் ‍இன்னும்
சில‌ கிராம‌ங்க‌ளில் கிளிக‌ள்
கூண்டுக‌ளில்தான் வாழ்கிற‌து..!!

கலாச்சார‌மும் நாக‌ரிக‌மும் -
அம்மாவிலிருந்து மம்மியிலும்..
அம்மியிலிருந்து மிக்ஸியிலும்..
க‌ன‌காம்ப‌ர‌ ரெட்டை ஜ‌டையிலுருந்து காற்ற‌ளாவிய‌ கூந்த‌லிலும்.. 

வேண்டியது கிடைத்தாலும்
'இன்னும் வேண்டுமென்று'
வேண்டுமென்றே
வேண்டுவோர் கணக்கில் ஆயிரம்..

இன்று -
சுத‌ந்திர‌ம் அடைவ‌தும்
உரிமைக‌ள் பெறுவ‌தும்
விடுத‌லைப் ப‌த்திர‌ங்க‌ள் மூல‌ம்...

'ம்மா'யெனும் முதல் விசும்பலிலே
தாய்மை வட்டதினுள்
போதுமென்றே அடங்கிவிடுகிறது
பெண்ணின் ஜென்ம சாபல்யங்கள்...

<மார்ச் 8> மகளிர் தின வாழ்த்துக்கள்..

Wednesday, April 28, 2010

வாட‌கைத்தாய்

ஊர்பேர் தெரியாது..
நாடுநகரம் அறியாது..
ஊராமல் நகராமல் ‍ பெற்ற‌
உயிரை உயில் எழுதித்தரும்
கோடீஸ்வரி!!

மறுவாழ்வு கொடுத்தாய்..
கருஉரு தந்தாய்..
வரம் பெறாத வாழ்வுதனில்
தாய் பட்டம் பெற்றுத்தரும்
தாயிவளே!!

ஏனென்றும் கேட்ட‌றிய‌வில்லை..
ஊணென்றும் ப‌டுத்துற‌ங்க‌வில்லை..
படைத்தவனை பறை சாற்றாமல்
உருக்குலைந்த தன் வாழ்விற்கு
உருவம்தரும் ரோஷக்காரி!!

பிள்ளைபேறு பெற்றேன்..
'ம்மா'வென்று கேட்டு அக‌ம‌கிழ்ந்தேன்..
பெற்ற‌வயிறும் உயிரும் பட்டினியிடாமல்
செவ்வ‌னே செப்ப‌னிட்டுவ‌ரும்
செவிலித்தாய்!!

பத்துமாதம் சுமந்து பெற்றேன்..
இரவு உறங்காது காத்து நின்றேன்..
தாய்வ‌ரம் பெற்றுத் த‌ருவ‌தானாலும்
ப‌ண‌ம்த‌னைப் பெறுவ‌தால் -
என் பெய‌ர் வாட‌கைத்தாய்..!!

Sunday, April 11, 2010

பயண முடிவில்..

பேருந்துகளில்
அழகிய தேவதைகளைப்
பார்க்கும் போதெல்லாம் அவளுடன்
டூயட் பாடி விடுகிறேன்..

பெய‌ர் தெரியாம‌ல்
ஊர் தெரியாம‌ல்
முத‌ல் பார்வையில்
வ‌ருவ‌து தானே காத‌ல்..??

பாதி பாடலில்
கதாநாயகிகள்
மாறுவது கூட உண்டு..

சில‌ பேருந்துப்
ப‌ய‌ண‌ங்க‌ளில்
விவாகர‌த்துச் செய்தும்
இறங்கியிருக்கிறேன்..

இறங்கிப் ப‌ய‌ணிக்கையில்
ஆல‌ய‌ ம‌ணியோடுக்
கேட்கும் நாண‌ய‌ங்க‌ளில் ‌
சிணுங்க‌ல்க‌ள்..
கோயில் மணியுடன் கேட்கும்
"ஐயா பசிக்குதையா.."
முணகல்கள்..

பொறுப்பேயில்லாத‌ உல‌கம்;
அக்க‌ரையில்லாத‌ ம‌னித‌ர்கள்;
ஆவேச‌ வ‌ச‌ன‌ங்க‌ள்
பேசாம‌ல் ந‌க‌ர்வ‌தில்லை
உள்ளிருக்கும் க‌தாநாய‌க‌ர்க‌ள்..

ஆவேச‌த்துடன்
அறைக்குள் நுழைந்தேன்..
துவைக்காம‌ல்
துணிக‌ள் விழித்திருந்த‌ன‌..

நாளைக்கென்று
ஒன்றை ம‌ட்டும்
கைக‌ள் க‌ச‌ங்காதாவாறு
துவைத்தேன்..

ம‌ற்ற‌வை
அழுக்குச் சேற்றில்
அழுது வ‌டிந்த‌ன‌..

உல‌க‌ம்
அதன் நேரத்திற்கு
உற‌ங்க‌ சென்ற‌து..
நானும் அப்ப‌டியே..
 

Saturday, April 10, 2010

வானம் பார்த்த பூமி

விள‌க்க‌ ஏத்தி வ‌ச்சாச்சு
அடுப்புவ‌யிறு இன்னும் எறிய‌ல‌..
எல்லாப்பதிலும் கேள்வியாத்தான் இருக்கு
ஏனெனும் தெரிய‌ல‌..

விழுந்து போன விழுதெல்லாம்
வேரா இன்னும் மாறல..
விடைபெற்று போனவங்க
விடைகொடுத்துட்டும் போகல..

ப‌ல் இளிச்சு நிக்குது விளைஞ்ச‌ நில‌ம்
திருவிழாவில‌ வித்துப்பார்த்தேன்.. விற்கல..
தேர்தல் வந்துடுது...விசேஷ‌ம் பார்த்துடுது...
அதனால கூட்டிக்க‌ழிச்சுப் பார்க்க‌ல‌..

ஆடு கோழி உயிர வாங்கியிருக்கோம்
வரம் ஒண்ணும் கொடுக்கல..
போக போர உசுரு - முன்ன பின்ன
சொல்லிக்கிட்டும் போறதில்ல..
 

Wednesday, April 7, 2010

தனியொரு இரவில்

இதமான‌ காற்று
வ‌ருவ‌தானாலும்
ஜ‌ன்ன‌லின் வாயை
மூடியே வைத்திருந்தேன்..

இருட்டின் சிரிப்பில்
திற‌ந்திருந்த‌ க‌த‌வை - யாரோ
த‌ட்டியதுப்போலிருந்‌தும்,
திற‌க்கவேயில்லை..

அதிசயமாக அவ்வூரில்
முதலில் சொல்வ‌தைக்
காது கொடுத்துக் கேட்ட‌ன‌ர்..
ஆனால் ராஜாவுக்கு பணிசெய்ய‌
பணிப்பெண்கள்தான் யாருமேயில்லை..

அன்றைய‌ நாய‌கிக‌ள்
வ‌ந்த‌ வ‌ண்ண‌முள்ள‌ன‌ர்
அன்றும் நினைத்த‌து
ப‌லிக்க‌வேவில்லை!!

ப‌சிக்க‌வில்லை
உண்ட‌தும் செறிக்க‌வில்லை
போலிருந்த‌து
ச‌மைய‌ல‌றை விள‌க்கு
எறிய‌வில்லை என்பதால்..

இடம்மாற்றி வைத்ததும்
எல்லாப் பொருளும்
இன்னும் அழகாக
தெரியவே செய்தன..

ஒளியை அணைக்காமல்
ஒலியை அதிகப்படுத்திக்கொண்டேன்
சிரிக்காதீர்கள்‍  - நானொன்றும்
ஒளிந்துக்கொள்ளவில்லை
 

Monday, April 5, 2010

திருத்தப்படாதக் கவிதை

அட‌ம்பிடித்து இத‌ழ்தொடும்
முன்கூந்த‌ல் முடிதனை
அறியா..ம‌ல் வரிசைசெய்கிறாய் -
நிச்ச‌ய‌ம் தீட்டியப்பிறகு
தூக்க‌ம் தொலைத்திருப்பான் பிர‌ம்ம‌ன்..!!

உன் அழகில்
‌ம‌ழை நனைந்துகொண்டிருந்த‌து..
கால்கள் தெரியாம‌ல்
பாவாடைத‌னைப் பிழிந்தாய்..
உண்மையாக‌வே கால்க‌ள்
தெரிய‌வேயில்லை...!

காற்றுக்கு கூட‌
அசைந்து கொடுப்பதில்லை
தோளில் தூங்கும் துப்பட்டா..
சரிந்தாலும்..சரியாக‌
சரிசெய்துக் கொள்கிறது..!!
(பாதைத்தவறும் குழந்தையை
"ஏய் அங்க போகாத.."என்று
பக்கத்திழுக்கும் தாய்ப்போல‌!..)

நடைப்பழகி நடக்கிறாய்..
இடைத்தழுவாமல் உடுத்துகிறாய்..
மடைத்திறந்தே இருக்கிறது.
தூண்டிலிடாமலே -
மாட்டிக்கொள்(ல்)கின்றன மீன்கள்..

எதிர்வரும் போதெல்லாம்
எதிரேப் பார்க்கிறாய்
எதிர்பார்க்கிறாய்..
எதிர்த்தும் பார்க்கிறாய்..
மதில்மேல் பூனையானேன்..

திருமணத்தில்
தூக்கிலிடப்படுவது பெண்கள் ‍-
காதலில் சத்தியமாக‌
ஆண்கள்தான்..
இது நிதர்சனமான உண்மை..!!

அப்ப‌ன் திட்டியிருக்க‌லாம்..
அண்ண‌ன் அடித்தேயிருக்க‌லாம்..
நீயாவ‌து முறைத்திருக்க‌லாம்..
எதுவுமேயில்லை - இப்போது
காத‌ல் நிஜ‌மாக‌வே வ‌ந்துவிட்ட‌து!..

தினமும்
விடிந்துக்கொண்டேதான்
இருக்கின்றது..
இன்னும் தீரவில்லை
உன் அழிச்சாட்டியங்கள்..

தலைப்பு உபயம்:  நண்பர் பௌல்..