Sunday, December 23, 2007

கண்ணாடிப் புன்னகை

பனிக்காற்றில்
தலை அசைத்து உறவாடும்
என் தோட்டத்து மலர்கள்...

வேப்ப மரத்து கூட்டில்
சிறகடித்து கூச்சலிடும்
சிட்டுக்குருவி..

தெருக்கதவோரம் செய்தித்தாள்,
மணிச்சத்தத்துடன் பால்காரன்..
கோலத்தை அழிக்காமல்...

பேருந்து படிக்கட்டில்
சிரித்தும்ம்.. சத்தமிட்டும்ம்..
ஊஞ்சலாடும் மாணவர்கள்...

புன்னகைத்தப்படியே இருந்தான்
என் மகன் - மாலையிட்ட
கண்ணாடிக் கூட்டில்...

காதல் படிக்கட்டு

முதல் சிரிப்பில் -
தாயவளின் அருகாமையை
உணர்ந்தேன்..

இரண்டாம் சந்திப்பில்
சிறகேதும் இல்லாமல்
பறந்தேன்..

மூன்றாம் பொழுதில்
நிலவோடு தனிமையில்
பேசி மகிழ்ந்தேன்..

நான்காம் விழிகள்
பார்ப்பது கூட தெரியாமல்
யாவும் மறந்தேன்..

ஐந்தே நிமிடம் கழித்து வருவதானாலும்
நொடிக்கொரு முறை வழிப்பார்த்தே
விழித்தேன்..

ஆறறிவை மறந்து
நடுரோட்டில் எதையோ பேசி
புலம்பி அலைந்தேன்..

ஏழுலகும் எட்டுத்திசையும்
காலடியில் இருப்பதாய்
கர்வமடைந்தேன்...

நீ காதலி ?
நான் காதலன் ?
கேள்விக்கு விடையளிக்காமலும்
விடைபெற முடியாமலும்
தூக்கம் தொலைத்தேன்..

பயணங்கள் முடியவிலலை
படிகளும் தூரமில்லை

காதலில் -
மறக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
மரணத்திற்கு சமானமே..