Wednesday, January 23, 2008

பேசும் மௌனம்

கோலமிடும் தருவாயில்
முன்விழும் கூந்தல்முடி -
புள்ளிகளுக்கு நடுவே பேசுமே
அந்த மௌனம்..!

கோயிலைச் சுற்றுகையில்
பாதத்தோடு இதழ்கள் -
அடிமேல் அடிவைத்து முணுமுணுக்குமே
அந்த மௌனம்..!

குளித்துவிட்டு திரும்புகையில்
தோளில் மின்னும் சிறுதுளி -
மயங்கி மயங்கி சிணுங்குமே
அந்த மௌனம்..!

நிலவு உறங்குகையில்
காற்றோடு இரவுகள் -
சத்தமே இல்லாமல் உரசிச்செல்லுமே
அந்த மௌனம்..!

கோபம் கொள்கையில்
கருவிழி இரண்டுமே -
சொல்லாமல் சொல்லிக் கொல்லுமே
அந்த மௌனம்..!

வெட்கம் அடைகையில்
குறுஞ்சிரிப்போடு விரல்கள் -
முடிச்சுகளை அவிழ்க்குமே
அந்த மௌனம்..!

Saturday, January 19, 2008

முதலிரவின் முதல் பத்து நிமிடங்கள்..

பால்..
பழம்..
ஊதுப்பத்தி..
இன்று முதலிரவு..?..

எனக்கு மட்டும்

கேட்கிறதாதென்று தெரியவில்லை -
மின்விசிறியிலிருந்து சத்தம் வருகிறது..

இன்று மட்டும்
எப்பொழுதும் இல்லாத வியர்வை -
மின்விசிறி இருந்தும்..

யார்யாரோ என்னைப் பற்றி
யோசிப்பதைப்
போலவே தோன்றுகிறது..

களமும் வேறு -
போரும் வேறு - ஆனால்
அருகில் இருக்கும் எதிரி
என்னால் தூக்கிலிடப்பட்டவள்..

பிடிக்காததைச் சொல்லலாமா ?-
பிடித்ததைச் சொல்லலாமா ?..
முதலில் இங்கு பேசவே கூடாது..


சரி -
முதலில் முத்தமிடுவதா? -
இல்லை அணைப்பதா..?..

அணைப்பதென்றாலும்
விளக்கை அணைத்தப் பிறகா ?
இல்லை அதற்கு முன்னதாகவா..?

ஜன்னல் வழிவந்த

இதமானக்காற்று
இதயம்வரை செல்லவில்லை..

பூத்தப்பூக்களும்
கட்டிலின் கால்களும்
கிரீச்..கிரீச்சென சிரிக்கிறது..

நெருப்பு சுடும் - அறிவேன்!..
உடல் சுடும் - அறிவேன்!..
மெத்தையும் சுடும் அறிந்தேன்.!..


நீலிக் கண்ணீர்


கைக்குட்டை நுனி,
துப்பட்டா தலை - இரண்டும்
கண்ணீரை ருசித்து நனைந்தது..!

உன் கண்ணீர்த்துளிக்கும்
பனித்துளிக்கும் - ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிப்பது கடினம்..!..

மலைப்படுகையில் சூரியன்
உதயமாகும் போது மேகம் சிவக்குமாம்..
உண்மையை உறுதி செய்தேன் -
அழும் போது உன் மேனியைக்கண்டு..

பெண்மை -
பிறந்தது ஓரிடம்..
வளர்ந்தது வேறு தடம்..
யாவும் புரிந்தது உன் சிணுங்களில் மட்டுமே..

உன் இதழ் மென்மையிலும்
ஓரிரு வார்த்தைகள்
சிக்கித்தான் மடிந்தன..

நேரொன்றில்லாமல்
கீழொன்றில்லாமல்
தாயம் விளையாடியது கண்கள்..

அடைத்துக்கொண்டது இதயக்குழி
துடைக்க மட்டும் மனமில்லை -
ரசித்தப்படியே நானும் நனைந்தேன்..

Sunday, January 6, 2008

முதல் நண்பன்


முதன்முதல் உலகத்த
முன்டிப்பார்க்கும் குழந்தை
முன்னறிமுகம் இல்லாததால்
முகம் கோணி அழும்...

முதன்முதலில் - எல்லோரும்

முன் வாங்கும் அடி
முன்னனுபவம் இல்லாததால்
முன்கோபம் மூக்கின் மேல் வரும்...

முதன்முதலில் - சொல்லாமல்,

முகம் பார்க்காமல், கொடுக்கும்
முதல் பரிசு யாருக்குமறியாமல்
முன்னறிவிப்பின்றி மனதில் அமரும்..

முதன்முதலில் -முகம் புதைத்து வாங்கும்

முத்தம், முன்பின் பாராமல்
முதன்முதலாய் இதழ்களின் மௌனம் பேசும்..

முதன்முதலில் - முயற்சியின் தோல்வியிலும்
முதுகை தட்டும்
முதல் நண்பன் - மரணப்படுக்கையின்
முதல் மாலையை விட பெரிதாய் உணர்த்தும் மனம்..

Tuesday, January 1, 2008

மணல் வீடு

சொல்வதற்கு முன்னே
விரும்பியவற்றை யாவும்
சொடிக்கிய நிமிடத்தில்..

வாசலில் பூசணிப்பூ கோலம்;
விட்டு விட்டு கூவும் சேவல்;
சாம்பிராணி வாசனை முற்றத்தில்..

தங்கைக்கு குதிரை வால்
ரெட்டை ஜடை அலங்கரித்து
முத்தமிடுவேன் கன்னத்தில்..

அத்தை மாமா வேண்டாம்;
அம்மா அப்பான்னு கூப்பிடுவேன்;
தாயம் விளையாடுவேன் கூடத்தில்..

மிஞ்சும் நேரங்களிலும்
விடியல் வாசல வந்த பிறகும்
கொஞ்சனும் கெஞ்சனும் கட்டிலில்..

வெள்ளிக்கிழமை விளக்கு போடுவேன்;
சத்தமா பாட்டு பாடுவேன்;
மெளன விரதம் இருப்பேன் சனிக்கிழமையில்..

தேன் சுவைக்கொண்ட வார்த்தைகளை
தேனீ சுவைத்தாலும் திகட்டியே
மறித்திருக்கும் இதழ்மடியில்..

நினைக்கும் போதே...?
உப்பு நீரோடு கூடுதலாய் கண்ணீரையும்
சுவைத்தது கடல் மணல்..