Monday, March 28, 2011

தெரியாது

கனவுகளில் கைக்கோர்த்துக்கொண்டேன்
என்னில் நான் தொலைவது தெரியாது..


மௌனம் போர்த்திக்கொண்டேன்
உள்ளம் பேசுவது தெரியாது..


கண்களை மூடிக்கொண்டேன்
இறந்தும் வாழுமிடம் தெரியாது..


மனம்தனில் நினைத்துக்கொண்டேன்
இருப்பிடத்தில் உயிர்கள் தெரியாது..


தெரியாது.. தெரியாது..
உன் அருகாமையில் எதுவுமே தெரியாது..


நீ பேசாமல்... பார்க்காமல்.. இருக்கும் போது
உன் ஒவ்வொரு விரலும் செய்யும் அசைவுகள்..
மேலும் கீழுமாய் பொய் பேசும் விழிகள்..
மனதென்னும் மூங்கிலுக்குள் நுழைந்தது காற்று..


எல்லாமே பழசுதான் என்றாலும்
காதல்னு வரும்போது புதுசுதானே..
உன்னோட இதழ் விரியாத சிரிப்பு மாதிரி..


Tuesday, March 8, 2011

முதல் விசும்பலிலே..

காய்க‌றி ச‌ந்தையிலும்
பூக்க‌டை வீதியிலும்
முழுமை அடைகிற‌து
முப்ப‌த்திமூன்று விழுக்காடுக‌ள்...

விழுக்காடுக‌ள் அதிக‌ரித்தாலும் ‍இன்னும்
சில‌ கிராம‌ங்க‌ளில் கிளிக‌ள்
கூண்டுக‌ளில்தான் வாழ்கிற‌து..!!

கலாச்சார‌மும் நாக‌ரிக‌மும் -
அம்மாவிலிருந்து மம்மியிலும்..
அம்மியிலிருந்து மிக்ஸியிலும்..
க‌ன‌காம்ப‌ர‌ ரெட்டை ஜ‌டையிலுருந்து காற்ற‌ளாவிய‌ கூந்த‌லிலும்.. 

வேண்டியது கிடைத்தாலும்
'இன்னும் வேண்டுமென்று'
வேண்டுமென்றே
வேண்டுவோர் கணக்கில் ஆயிரம்..

இன்று -
சுத‌ந்திர‌ம் அடைவ‌தும்
உரிமைக‌ள் பெறுவ‌தும்
விடுத‌லைப் ப‌த்திர‌ங்க‌ள் மூல‌ம்...

'ம்மா'யெனும் முதல் விசும்பலிலே
தாய்மை வட்டதினுள்
போதுமென்றே அடங்கிவிடுகிறது
பெண்ணின் ஜென்ம சாபல்யங்கள்...

<மார்ச் 8> மகளிர் தின வாழ்த்துக்கள்..

Wednesday, April 28, 2010

வாட‌கைத்தாய்

ஊர்பேர் தெரியாது..
நாடுநகரம் அறியாது..
ஊராமல் நகராமல் ‍ பெற்ற‌
உயிரை உயில் எழுதித்தரும்
கோடீஸ்வரி!!

மறுவாழ்வு கொடுத்தாய்..
கருஉரு தந்தாய்..
வரம் பெறாத வாழ்வுதனில்
தாய் பட்டம் பெற்றுத்தரும்
தாயிவளே!!

ஏனென்றும் கேட்ட‌றிய‌வில்லை..
ஊணென்றும் ப‌டுத்துற‌ங்க‌வில்லை..
படைத்தவனை பறை சாற்றாமல்
உருக்குலைந்த தன் வாழ்விற்கு
உருவம்தரும் ரோஷக்காரி!!

பிள்ளைபேறு பெற்றேன்..
'ம்மா'வென்று கேட்டு அக‌ம‌கிழ்ந்தேன்..
பெற்ற‌வயிறும் உயிரும் பட்டினியிடாமல்
செவ்வ‌னே செப்ப‌னிட்டுவ‌ரும்
செவிலித்தாய்!!

பத்துமாதம் சுமந்து பெற்றேன்..
இரவு உறங்காது காத்து நின்றேன்..
தாய்வ‌ரம் பெற்றுத் த‌ருவ‌தானாலும்
ப‌ண‌ம்த‌னைப் பெறுவ‌தால் -
என் பெய‌ர் வாட‌கைத்தாய்..!!

Sunday, April 11, 2010

பயண முடிவில்..

பேருந்துகளில்
அழகிய தேவதைகளைப்
பார்க்கும் போதெல்லாம் அவளுடன்
டூயட் பாடி விடுகிறேன்..

பெய‌ர் தெரியாம‌ல்
ஊர் தெரியாம‌ல்
முத‌ல் பார்வையில்
வ‌ருவ‌து தானே காத‌ல்..??

பாதி பாடலில்
கதாநாயகிகள்
மாறுவது கூட உண்டு..

சில‌ பேருந்துப்
ப‌ய‌ண‌ங்க‌ளில்
விவாகர‌த்துச் செய்தும்
இறங்கியிருக்கிறேன்..

இறங்கிப் ப‌ய‌ணிக்கையில்
ஆல‌ய‌ ம‌ணியோடுக்
கேட்கும் நாண‌ய‌ங்க‌ளில் ‌
சிணுங்க‌ல்க‌ள்..
கோயில் மணியுடன் கேட்கும்
"ஐயா பசிக்குதையா.."
முணகல்கள்..

பொறுப்பேயில்லாத‌ உல‌கம்;
அக்க‌ரையில்லாத‌ ம‌னித‌ர்கள்;
ஆவேச‌ வ‌ச‌ன‌ங்க‌ள்
பேசாம‌ல் ந‌க‌ர்வ‌தில்லை
உள்ளிருக்கும் க‌தாநாய‌க‌ர்க‌ள்..

ஆவேச‌த்துடன்
அறைக்குள் நுழைந்தேன்..
துவைக்காம‌ல்
துணிக‌ள் விழித்திருந்த‌ன‌..

நாளைக்கென்று
ஒன்றை ம‌ட்டும்
கைக‌ள் க‌ச‌ங்காதாவாறு
துவைத்தேன்..

ம‌ற்ற‌வை
அழுக்குச் சேற்றில்
அழுது வ‌டிந்த‌ன‌..

உல‌க‌ம்
அதன் நேரத்திற்கு
உற‌ங்க‌ சென்ற‌து..
நானும் அப்ப‌டியே..
 

Saturday, April 10, 2010

வானம் பார்த்த பூமி

விள‌க்க‌ ஏத்தி வ‌ச்சாச்சு
அடுப்புவ‌யிறு இன்னும் எறிய‌ல‌..
எல்லாப்பதிலும் கேள்வியாத்தான் இருக்கு
ஏனெனும் தெரிய‌ல‌..

விழுந்து போன விழுதெல்லாம்
வேரா இன்னும் மாறல..
விடைபெற்று போனவங்க
விடைகொடுத்துட்டும் போகல..

ப‌ல் இளிச்சு நிக்குது விளைஞ்ச‌ நில‌ம்
திருவிழாவில‌ வித்துப்பார்த்தேன்.. விற்கல..
தேர்தல் வந்துடுது...விசேஷ‌ம் பார்த்துடுது...
அதனால கூட்டிக்க‌ழிச்சுப் பார்க்க‌ல‌..

ஆடு கோழி உயிர வாங்கியிருக்கோம்
வரம் ஒண்ணும் கொடுக்கல..
போக போர உசுரு - முன்ன பின்ன
சொல்லிக்கிட்டும் போறதில்ல..
 

Wednesday, April 7, 2010

தனியொரு இரவில்

இதமான‌ காற்று
வ‌ருவ‌தானாலும்
ஜ‌ன்ன‌லின் வாயை
மூடியே வைத்திருந்தேன்..

இருட்டின் சிரிப்பில்
திற‌ந்திருந்த‌ க‌த‌வை - யாரோ
த‌ட்டியதுப்போலிருந்‌தும்,
திற‌க்கவேயில்லை..

அதிசயமாக அவ்வூரில்
முதலில் சொல்வ‌தைக்
காது கொடுத்துக் கேட்ட‌ன‌ர்..
ஆனால் ராஜாவுக்கு பணிசெய்ய‌
பணிப்பெண்கள்தான் யாருமேயில்லை..

அன்றைய‌ நாய‌கிக‌ள்
வ‌ந்த‌ வ‌ண்ண‌முள்ள‌ன‌ர்
அன்றும் நினைத்த‌து
ப‌லிக்க‌வேவில்லை!!

ப‌சிக்க‌வில்லை
உண்ட‌தும் செறிக்க‌வில்லை
போலிருந்த‌து
ச‌மைய‌ல‌றை விள‌க்கு
எறிய‌வில்லை என்பதால்..

இடம்மாற்றி வைத்ததும்
எல்லாப் பொருளும்
இன்னும் அழகாக
தெரியவே செய்தன..

ஒளியை அணைக்காமல்
ஒலியை அதிகப்படுத்திக்கொண்டேன்
சிரிக்காதீர்கள்‍  - நானொன்றும்
ஒளிந்துக்கொள்ளவில்லை
 

Monday, April 5, 2010

திருத்தப்படாதக் கவிதை

அட‌ம்பிடித்து இத‌ழ்தொடும்
முன்கூந்த‌ல் முடிதனை
அறியா..ம‌ல் வரிசைசெய்கிறாய் -
நிச்ச‌ய‌ம் தீட்டியப்பிறகு
தூக்க‌ம் தொலைத்திருப்பான் பிர‌ம்ம‌ன்..!!

உன் அழகில்
‌ம‌ழை நனைந்துகொண்டிருந்த‌து..
கால்கள் தெரியாம‌ல்
பாவாடைத‌னைப் பிழிந்தாய்..
உண்மையாக‌வே கால்க‌ள்
தெரிய‌வேயில்லை...!

காற்றுக்கு கூட‌
அசைந்து கொடுப்பதில்லை
தோளில் தூங்கும் துப்பட்டா..
சரிந்தாலும்..சரியாக‌
சரிசெய்துக் கொள்கிறது..!!
(பாதைத்தவறும் குழந்தையை
"ஏய் அங்க போகாத.."என்று
பக்கத்திழுக்கும் தாய்ப்போல‌!..)

நடைப்பழகி நடக்கிறாய்..
இடைத்தழுவாமல் உடுத்துகிறாய்..
மடைத்திறந்தே இருக்கிறது.
தூண்டிலிடாமலே -
மாட்டிக்கொள்(ல்)கின்றன மீன்கள்..

எதிர்வரும் போதெல்லாம்
எதிரேப் பார்க்கிறாய்
எதிர்பார்க்கிறாய்..
எதிர்த்தும் பார்க்கிறாய்..
மதில்மேல் பூனையானேன்..

திருமணத்தில்
தூக்கிலிடப்படுவது பெண்கள் ‍-
காதலில் சத்தியமாக‌
ஆண்கள்தான்..
இது நிதர்சனமான உண்மை..!!

அப்ப‌ன் திட்டியிருக்க‌லாம்..
அண்ண‌ன் அடித்தேயிருக்க‌லாம்..
நீயாவ‌து முறைத்திருக்க‌லாம்..
எதுவுமேயில்லை - இப்போது
காத‌ல் நிஜ‌மாக‌வே வ‌ந்துவிட்ட‌து!..

தினமும்
விடிந்துக்கொண்டேதான்
இருக்கின்றது..
இன்னும் தீரவில்லை
உன் அழிச்சாட்டியங்கள்..

தலைப்பு உபயம்:  நண்பர் பௌல்..
 

Friday, March 19, 2010

சிலையின் புல‌ம்ப‌ல்

க‌ன்ன‌ம் தொடுவ‌தும்
இடைக் கிள்ளுவ‌தும்
ஆறிய காய‌த்தில்
சின்ன‌தாய் கீறல்..

எனை சிரித்த‌ப‌டி
செதுக்கிய‌தால்
அழுவ‌து தெரிவதே இல்லை..

கைகால் அசையாத‌
கர்ப்ப‌கிர‌க‌ சிலையை
பார்ப்ப‌வ‌ரெல்லாம்
வேண்டி செல்கிறார்க‌ள்..
இது வேண்டும்..அது வேண்டுமென

நான் கூட‌ ப‌ர‌வாயில்லை ‍‍
போலிருக்கிற‌து..!!

செதுக்கிய‌வ‌ன்
காய‌ப்படுத்திய‌தில்
ந‌டை'முறை'ப‌டுத்த‌ப்ப‌டுகிற‌து
இன்றைய‌ க‌லாச்சார‌ம்..

குறிப்பு:என‌து ந‌ண்ப‌ர் ஜானிபிர‌காஷ் எழுதிய‌ இர‌ண்டுவ‌ரி க‌விதையில் அழாம‌ல் பிறந்த‌து இந்த‌ குழ‌ந்தை
ந‌ன்றி!! ஜானி
 

Monday, January 5, 2009

டாட்டா ..

அம்மாவுக்கு டாட்டா காட்டினாள்;
அப்பாவுக்கு டாட்டா காட்டினாள்;
ஆயாவின் மடியில் படுத்துறங்கியபடியே…

Tuesday, June 3, 2008

காதல் வாழ்கின்றது

சண்முகம்ம்... - இவள்..
புவனா.. புவனா .. - இவன்..!

உனக்காகவே வாழ்கிறேன் - அவள்
எனக்காகவே பிறந்தவள் - அவன்..!

மனசுக்குள்ள சிறுசா சிரிச்சுப்பா.. - இவள்..
எல்லாத்துலயும் ஜெயிச்சுட்டதா நினைக்கிறான் - இவன்..?

நேரம் போவதே தெரியவில்லை - அவள் ..
நிலவும் உனைப்போல் அழகில்லை - அவன்..!

மொழியே தெரியாத உன் ஒருகன அணைப்பு சுகம் - இவள்..
திசைத்தெரியாம போற பட்டம் பிடிச்சுருக்கு - இவன்..!

விழியிலிருந்து அகலவேயில்லை நம் கனவு - அவள்..
விடுமுறையில் விடியவேயில்லை விடியல் - அவன்..!

கையில் பத்திரிக்கையோடு - இவள்
மனதில் கடமையோடு - இவன்..?

விழி சேர்த்தது.. விதி பிரித்தது..
மொழி பெயர்ந்தது - அந்த நேர வலிகள்..

இரண்டு வருடம் கழித்து.....
... .. ...

இவர்களின் குழந்தைகள் சந்தித்தன
உன் பெயர் என்ன? - புவனேஸ்வரி..

உன் பெயர் என்ன? - சண்முகநாதன்...

காதல் வாழ்கின்றது
இவர்களின் முகவரியில்...

Wednesday, January 23, 2008

பேசும் மௌனம்

கோலமிடும் தருவாயில்
முன்விழும் கூந்தல்முடி -
புள்ளிகளுக்கு நடுவே பேசுமே
அந்த மௌனம்..!

கோயிலைச் சுற்றுகையில்
பாதத்தோடு இதழ்கள் -
அடிமேல் அடிவைத்து முணுமுணுக்குமே
அந்த மௌனம்..!

குளித்துவிட்டு திரும்புகையில்
தோளில் மின்னும் சிறுதுளி -
மயங்கி மயங்கி சிணுங்குமே
அந்த மௌனம்..!

நிலவு உறங்குகையில்
காற்றோடு இரவுகள் -
சத்தமே இல்லாமல் உரசிச்செல்லுமே
அந்த மௌனம்..!

கோபம் கொள்கையில்
கருவிழி இரண்டுமே -
சொல்லாமல் சொல்லிக் கொல்லுமே
அந்த மௌனம்..!

வெட்கம் அடைகையில்
குறுஞ்சிரிப்போடு விரல்கள் -
முடிச்சுகளை அவிழ்க்குமே
அந்த மௌனம்..!

Saturday, January 19, 2008

முதலிரவின் முதல் பத்து நிமிடங்கள்..

பால்..
பழம்..
ஊதுப்பத்தி..
இன்று முதலிரவு..?..

எனக்கு மட்டும்

கேட்கிறதாதென்று தெரியவில்லை -
மின்விசிறியிலிருந்து சத்தம் வருகிறது..

இன்று மட்டும்
எப்பொழுதும் இல்லாத வியர்வை -
மின்விசிறி இருந்தும்..

யார்யாரோ என்னைப் பற்றி
யோசிப்பதைப்
போலவே தோன்றுகிறது..

களமும் வேறு -
போரும் வேறு - ஆனால்
அருகில் இருக்கும் எதிரி
என்னால் தூக்கிலிடப்பட்டவள்..

பிடிக்காததைச் சொல்லலாமா ?-
பிடித்ததைச் சொல்லலாமா ?..
முதலில் இங்கு பேசவே கூடாது..


சரி -
முதலில் முத்தமிடுவதா? -
இல்லை அணைப்பதா..?..

அணைப்பதென்றாலும்
விளக்கை அணைத்தப் பிறகா ?
இல்லை அதற்கு முன்னதாகவா..?

ஜன்னல் வழிவந்த

இதமானக்காற்று
இதயம்வரை செல்லவில்லை..

பூத்தப்பூக்களும்
கட்டிலின் கால்களும்
கிரீச்..கிரீச்சென சிரிக்கிறது..

நெருப்பு சுடும் - அறிவேன்!..
உடல் சுடும் - அறிவேன்!..
மெத்தையும் சுடும் அறிந்தேன்.!..


நீலிக் கண்ணீர்


கைக்குட்டை நுனி,
துப்பட்டா தலை - இரண்டும்
கண்ணீரை ருசித்து நனைந்தது..!

உன் கண்ணீர்த்துளிக்கும்
பனித்துளிக்கும் - ஆறு வித்தியாசங்கள்
கண்டுபிடிப்பது கடினம்..!..

மலைப்படுகையில் சூரியன்
உதயமாகும் போது மேகம் சிவக்குமாம்..
உண்மையை உறுதி செய்தேன் -
அழும் போது உன் மேனியைக்கண்டு..

பெண்மை -
பிறந்தது ஓரிடம்..
வளர்ந்தது வேறு தடம்..
யாவும் புரிந்தது உன் சிணுங்களில் மட்டுமே..

உன் இதழ் மென்மையிலும்
ஓரிரு வார்த்தைகள்
சிக்கித்தான் மடிந்தன..

நேரொன்றில்லாமல்
கீழொன்றில்லாமல்
தாயம் விளையாடியது கண்கள்..

அடைத்துக்கொண்டது இதயக்குழி
துடைக்க மட்டும் மனமில்லை -
ரசித்தப்படியே நானும் நனைந்தேன்..

Sunday, January 6, 2008

முதல் நண்பன்


முதன்முதல் உலகத்த
முன்டிப்பார்க்கும் குழந்தை
முன்னறிமுகம் இல்லாததால்
முகம் கோணி அழும்...

முதன்முதலில் - எல்லோரும்

முன் வாங்கும் அடி
முன்னனுபவம் இல்லாததால்
முன்கோபம் மூக்கின் மேல் வரும்...

முதன்முதலில் - சொல்லாமல்,

முகம் பார்க்காமல், கொடுக்கும்
முதல் பரிசு யாருக்குமறியாமல்
முன்னறிவிப்பின்றி மனதில் அமரும்..

முதன்முதலில் -முகம் புதைத்து வாங்கும்

முத்தம், முன்பின் பாராமல்
முதன்முதலாய் இதழ்களின் மௌனம் பேசும்..

முதன்முதலில் - முயற்சியின் தோல்வியிலும்
முதுகை தட்டும்
முதல் நண்பன் - மரணப்படுக்கையின்
முதல் மாலையை விட பெரிதாய் உணர்த்தும் மனம்..

Tuesday, January 1, 2008

மணல் வீடு

சொல்வதற்கு முன்னே
விரும்பியவற்றை யாவும்
சொடிக்கிய நிமிடத்தில்..

வாசலில் பூசணிப்பூ கோலம்;
விட்டு விட்டு கூவும் சேவல்;
சாம்பிராணி வாசனை முற்றத்தில்..

தங்கைக்கு குதிரை வால்
ரெட்டை ஜடை அலங்கரித்து
முத்தமிடுவேன் கன்னத்தில்..

அத்தை மாமா வேண்டாம்;
அம்மா அப்பான்னு கூப்பிடுவேன்;
தாயம் விளையாடுவேன் கூடத்தில்..

மிஞ்சும் நேரங்களிலும்
விடியல் வாசல வந்த பிறகும்
கொஞ்சனும் கெஞ்சனும் கட்டிலில்..

வெள்ளிக்கிழமை விளக்கு போடுவேன்;
சத்தமா பாட்டு பாடுவேன்;
மெளன விரதம் இருப்பேன் சனிக்கிழமையில்..

தேன் சுவைக்கொண்ட வார்த்தைகளை
தேனீ சுவைத்தாலும் திகட்டியே
மறித்திருக்கும் இதழ்மடியில்..

நினைக்கும் போதே...?
உப்பு நீரோடு கூடுதலாய் கண்ணீரையும்
சுவைத்தது கடல் மணல்..

Sunday, December 23, 2007

கண்ணாடிப் புன்னகை

பனிக்காற்றில்
தலை அசைத்து உறவாடும்
என் தோட்டத்து மலர்கள்...

வேப்ப மரத்து கூட்டில்
சிறகடித்து கூச்சலிடும்
சிட்டுக்குருவி..

தெருக்கதவோரம் செய்தித்தாள்,
மணிச்சத்தத்துடன் பால்காரன்..
கோலத்தை அழிக்காமல்...

பேருந்து படிக்கட்டில்
சிரித்தும்ம்.. சத்தமிட்டும்ம்..
ஊஞ்சலாடும் மாணவர்கள்...

புன்னகைத்தப்படியே இருந்தான்
என் மகன் - மாலையிட்ட
கண்ணாடிக் கூட்டில்...

காதல் படிக்கட்டு

முதல் சிரிப்பில் -
தாயவளின் அருகாமையை
உணர்ந்தேன்..

இரண்டாம் சந்திப்பில்
சிறகேதும் இல்லாமல்
பறந்தேன்..

மூன்றாம் பொழுதில்
நிலவோடு தனிமையில்
பேசி மகிழ்ந்தேன்..

நான்காம் விழிகள்
பார்ப்பது கூட தெரியாமல்
யாவும் மறந்தேன்..

ஐந்தே நிமிடம் கழித்து வருவதானாலும்
நொடிக்கொரு முறை வழிப்பார்த்தே
விழித்தேன்..

ஆறறிவை மறந்து
நடுரோட்டில் எதையோ பேசி
புலம்பி அலைந்தேன்..

ஏழுலகும் எட்டுத்திசையும்
காலடியில் இருப்பதாய்
கர்வமடைந்தேன்...

நீ காதலி ?
நான் காதலன் ?
கேள்விக்கு விடையளிக்காமலும்
விடைபெற முடியாமலும்
தூக்கம் தொலைத்தேன்..

பயணங்கள் முடியவிலலை
படிகளும் தூரமில்லை

காதலில் -
மறக்கப்படுவதும்
மறுக்கப்படுவதும்
மரணத்திற்கு சமானமே..

Wednesday, October 10, 2007

சுத்த சைவம்


சண்டைகள் இல்லை;
சமரசம் வேண்டாம்;
முறித்து கொள்கிறது உறவுகளை..
சட்டம் தூவும்
விவாகரத்து அக்ஷதைகள்..

சிறப்பு வரிசை கட்டணம்
உண்டியலும் வாய் பிளந்தது
கொட்டாவி விடும்
வாசல் தெய்வங்கள்..

நடுத்தெருவில்
துடித்து கொண்டிருக்கும் உயிர்
வேடிக்கை பார்த்துவிட்டு
நடுப்பக்கத்தைத் திருப்பும்
ஆசாமி..

கரைத்தாண்டி
கலாச்சாரத்தின் வண்ணம் மாற்றும்
கடற்கரை நிலாக்கள்..

பத்து மாத வலியை
பத்தே நிமிடத்தில்
மறக்க வைக்கும்
பெரிய பத்தின் காந்தி சிரிப்பு..

முடித்து வைக்க
மரணமே வந்தாலும்
அதற்கும் சிலையெழுப்பி
மாலையிடுவான் -
எங்க ஊர் அரசியல்வாதி..

கோவணமும்
கட்சி கொடியாகும்
அபாயம்..!


வயதுக்கு வந்த நாட்களில்..


யாரோ என்னுடன்
நடப்பதைப் போலவே
உணர்கிறேன்..

யாருக்குமறியாமல்
கண்ணாடிமுன் நின்று
சிரித்துக் கொள்கிறேன்..

எல்லோரும் என்னையே
உற்றுப் பார்ப்பதுபோலவே
தெரிகிறது..

கண்கள் நேராக
பார்த்து பேசக்
கூச்சப்படுகிறது..!

எனக்கறியாமல் உடைகளைச்
சரிசெய்துகொள்கிறது
கைகள்..!

தெருவில் இருக்கும்
கடைகளில் தொங்கும்
உடைகளை கனவில்
உடுத்தி ரசிக்கிறேன்..

நாளும் -
நாலும் தெரிந்ததுபோல்
கதைக்கிறது மனசு..

Wednesday, October 3, 2007

காதலும் நானும்


உண்மையாகவே கண்ணாடியில்
இன்றைக்கு மட்டும்
அழகாகவே தெரிகிறேன்..

இரவும் பகலும் -
நிலவும் சூரியனும் -
விழித்தேயிருக்கிறது..

நாட்கள் எனக்கே
சொந்தமாக இருக்கிறது..

பேருந்து பயணங்களில்
தனிமையாக
பயணிப்பதில்லை..

பூக்கள் படுக்கின்ற
சாலையில் நடப்பதேயில்லை..

அழுவதற்கும் சிரிப்பதற்கும்
வித்தியாசமே தெரிவதில்லை..

ஒவ்வொரு வேலையும்
இரண்டு முறை செய்யும்
பழக்கம் பழகிவிட்டது..


மிக சரியான பொய்களை
நிதமும் சொல்லிக் கொள்கிறேன்
கண்மூடிதனமாக..

எல்லா அழகுடனும் - உன்னையே
ஒப்பிட்டுக் கொண்டேயிருக்கிறது
கண்கள்...

உணவு வேளையில்
பொறியலில் உள்ள
கடுகையும் பருப்பையும்
பிரித்துக் கொண்டிருக்கிறேன்..

காதலே!..
குழந்தை அழுதுக்கொண்டேயிருக்கிறது
நிலாவைக் காட்டி
சோரூட்டுவாயா..